Saturday, September 15, 2012

சுந்தரபாண்டியன் - விமர்சனம்


பாஸ் (எ) பாஸ்கரன் படத்திற்கு பின் திரையரங்கமே சிரித்து ரசித்த படம் சுந்தரபாண்டியன் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பே இருக்காது என நம்புகிறேன்.

மதுரையை பின்னனியாக கொண்டு இரு கிராமங்களுக்கு இடையேயான நட்பு, காதல் & துரோகம் என கதை நகர்கிறது. இது சசிகுமார் & கோ'விற்கு புதியதில்லை என்றாலும் கதை சொல்லப்பட்ட விதங்களிலும் (திரைக்கதை) மற்றும் கதாபாத்திரங்களின் தேர்வாலும் சுந்தரபாண்டியன் வெற்றி அடையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

இதுவரை சசிகுமாரை இயல்பான அறிமுகத்தோடு பார்த்து பழகிய நமக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக மாஸ் ஓபனிங் ஒரு பாடலுடன் அமைத்திருக்கிறார் இயக்குனர் பிரபாகர், சசிகுமாரின் முந்தய படங்களில் உள்ள அதே மேனரிசம் கை சட்டையை மடித்து விடுவது, தலையை கோதுவது & அசட்டுச் சிரிப்பு தொடர்கிறது இவையனைத்தும் சற்றே அலுப்பை தந்தாலும் ரசிக்க முடிந்தது. சசிகுமாரின் காஸ்டியூம் அருமை. எப்போதும் போல தன் வேலையை செவ்வனே செய்து முடித்திருக்கிறார் சசிகுமார்.

கதாநாயகி லக்ஷ்மி மேனன், பெரிய கண்கள் பெரிய உதடு என மைனாவின் இளைய சகோதரி போல உள்ளார். நல்ல நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார் உதாரணமாக சில காட்சிகளில் கண்கள் மட்டுமே நடிக்க வேண்டிய இடங்களில் அசத்தி இருக்கிறார். கேரளத்து பைங்கிளிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.


'வெண்நிலா கபடி குழு' பரோட்டா புகழ் சூரி மற்றும் சசிகுமார் காமெடி சரவெடிகள்.

கதாநாயகன் மற்றும் கதாநாயகி அப்பா கதாபாத்திரங்கள் மிக எதார்த்தமாகவும் கண்ணியமாகவும் சித்தரித்துள்ளார், இருவருக்குமிடையேயான சந்திப்பும் கூட மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் பிரபாகர்.

இசையமைப்பாளர் ரகுநாதனுக்கு முதல் படம் போலும் சசிகுமாரின் பழைய படங்களின் BGM ஆங்காங்கே கேட்கிறது. பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாத படம் என்பதால் பாடல்கள் சுமார் தான்.

பிரேம்குமாரின் ஒளிப்பதிவு பளீச்.

சுந்தரபாண்டியனின் திரைக்கதை, வசனம், இயக்கம் பிரபாகரனுக்கு மிகப் பெரிய வரவேற்பைத் தரும்.

மொத்தத்தில் சுந்தரபாண்டியன் OLD WINE IN A NEW GLASS WITH DIFFERENT TASTE

என்றும் அன்புடன்
ரவிக்குமார்
Twitter: @ravi_2kpp

Monday, January 23, 2012

இனி ஒரு யுகம் செய்வோம்


Ashok

நேற்று (22-ஜனவரி'2012) மாலை 7:30 மணியலவில் ஊரில் இருந்து நண்பன் வந்ததை அறிந்து அவனை சந்திக்க சென்ட்ரல் வரை உள்ளூர் தொடர்வண்டியில் பிரயாணிக்கும் போது எற்பட்ட இனிமையான சந்திப்பு அது, ஆம் அவன் பெயர் அசோக் சுண்டல் விற்கும் சிறுவன் படிப்பு ஏழாம் வகுப்பு (படித்துக் கொண்டிக்கிறான்) வீடு கலங்கரை விளக்கத்தில் தன் அண்ணன் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறாராம் தானும் நன்றாக படித்து போலீசில் சேர்வதே தன் லட்சியம் என்றான், சரி ஏன் சுண்டல் விற்கிறாய் அம்மா அப்பா என்றேன் அப்பா டி கடையில் வேலை செய்வதாகவும் அம்மா வீட்டில் இருப்பதாகவும் கூறினான். என் கைபேசி மணி ஒலித்தது நண்பர் டி நகரில் இருந்து புறப்பட்டு விட்டதாக தகவல், மீண்டும் வினவத் தொடங்கினேன் உனக்கு எதில் ஆர்வம் என்றேன் அறிவியல் என ஆரம்பித்த அசோக் எனக்கே தெரியாத பல தொழில்நுட்பத்தையும் விவரித்தான் சட்டென என் கைபேசியை பார்த்த அவன் அண்ணா! இது இPஹொநெ தானே இந்தியாவில் கிடைக்குது தானே? என்றான் திகைப்பில் நான் ஹிம் ஆமாம் என்றேன் தினமும் பள்ளி முடிந்ததும் சுண்டல் விற்க வந்துவிடுவானாம் இரவு வீடு சென்று 11 மணி வரை வீட்டுப்பாடம் முடித்து பின் தான் தூங்குவானாம் தனக்கு இன்று உடல் நலம் சரியில்லை என்பதால் சீக்கிரம் வீட்டுக்கு செல்வதாக கூறி முடிக்கவில்லை கலங்கரை விளக்கம் நிருத்தம் வந்துவிட்டது அண்ணா வருகிறேன் என இறங்கிவிட்டான் அவன் மட்டும் இறங்கவில்லை எனக்குள் இருந்த பல ஏற்றங்களையும் இறக்கிச் சென்றான் இதை கூர்ந்து கவனித்து வந்த எதிர் சீட்டு நபர் இந்த மாதிரி பசங்க எல்லாம் கிரிமினலாத் தான் சார் வருவாங்க என்றார் "முன்கூட்டிய யோசனைக்காரன்" போலும் என நினைத்து சிரித்துக் கொண்டேன் நானும் பூங்கா நகர் நிருத்தத்தில் இறங்கிவிட்டேன், நண்பர்களை சந்தித்து மீண்டும் வீடு திரும்பும் வரை ஏன் இதை பதியும் வரை இன்னமும் அசோக் வடிவில் என் நினைவில் பல கேள்வில் எழுந்து கொண்டே இருக்கிறது.

நாம் அனைவரும் பிறக்கும் போது சமம் தானே எனக்கு கிடைத்தது ஏன் அவனுக்கு கிடைக்கவில்லை, அப்படி என்றால் இந்த சமுதாய முறையில் ஏதோ தவறு இருக்கிறது என்பது நம் கண் முன் தெரிகிறது, நமக்கு கிடைத்த இந்த உரிமையில் அவனுக்கும் சொந்தம் உண்டல்லவா ஏதோ ஒன்று மாற்றிவிட்டது அதை விவாதிக்கும் நேரம் இதுவல்ல. நமக்கு கிடைத்த வாய்ப்பு போல் அசோக் போன்ற சிறுவர்களுக்கு கிடைக்கச் செய்வதே நாம் இந்த சமூகத்தை சமப்படுத்தும் களப்பணியின் முதல் கட்டமாகும்.

நம் ஊரில் அல்லது பக்கத்து வீட்டில் இன்னும் பல அசோக்கள் உள்ளனர் அவர்களுக்கு வழிகாட்டுங்கள் இது ஏதோ நாளையோ அடுத்த வருடமோ பலன் தரும் என நினைப்பது பொய் இன்று நாம் கொடுப்பது நாளை அவன் மற்றவர்களுக்கு கொடுப்பதில் தான் வெற்றி, அசோக் போன்றவர்களை தயார்படுத்த தயாராகுங்கள்.

நன்றி